களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் பயணம்.!

சென்னை: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (26ம் தேதி) விழுப்புரம் செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, நாளை(26ம் தேதி) அவர் விழுப்புரம் செல்கிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் (27ம் தேதி) இரண்டு நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், திண்டுக்கல் பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தவிர முக்கிய துறை அதிகாரிகள், ஆட்சியர், எஸ்பி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். நாளை விழுப்புரத்துக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (26ம் தேதி) மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மறுநாள் 27ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், பிறதுறை மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார். தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் முதலமைச்சரை சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை, குறைகள் தொடர்பாகவும் கேட்டறிய உள்ளார். 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் 27ம் தேதி மாலை விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு செல்கிறார்.

The post களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் பயணம்.! appeared first on Dinakaran.

Related Stories: