சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசின் அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் அணில் ககோட்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் நேரில் 1,031 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இன்-ஆப்ஷன்சியா முறையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் 89,053 மாணவர்களும் தொலைதூர கல்வி இயக்கத்தின் மூலம் 16,263 மாணவர்களும், பல்கலைக்கழக துறைகளில் 1,404 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்பில் 70 மாணவர்கள் என மொத்தம் 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன், இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 72ன் கீழ் கருணை மனு மீது குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம், பிரிவு 161ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்த ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். அதேபோல ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒருங்கிணைப்புக் குழுதான், பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா துணைவேந்தர் இல்லாமல் நடைபெற்றது. 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் துணை வேந்தருக்காக என குறிப்பிட்டு, உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கையொப்பத்தோடு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவில் உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: