சென்னை துறைமுகத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் அன்புமணி ராமதாஸ் மனைவி பெயரில் இயங்கிய ஐஸ் பேக்டரிக்கு அதிரடி சீல்: காசிமேடு பகுதியில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால், அன்புமணி ராமதாஸ் மனைவி பெயரில் இயங்கி வந்த ஐஸ் பேக்டரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்து வருவார்கள். மீன்களை பாதுகாப்பாக வைக்க ஐஸ் கொண்டு செல்வார்கள். இதற்காக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஸ் பேக்டரிகள் உள்ளன. இந்த ஐஸ் கம்பெனிகள் சென்னை துறைமுகத்திற்கு வாடகை செலுத்தி வருகிறார்கள். இங்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா பெயரில் ஐஸ் பேக்டரி செயல்பட்டு வருகிறது.

இந்த பேக்டரி கடந்த 2008 முதல் செயல்படுகிறது. இவர்கள், கடந்த 2021 முதல் சென்னை துறைமுகத்திற்கு வாடகை செலுத்தவில்லையாம். ரூ.38 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம்தேதி துறைமுக மேலாண்மை குழு சிஇஓ துரை மாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் சவுமியா பெயரில் உள்ள ஐஸ் பேக்டரிக்கு சீல் வைக்க ஊழியர்கள் சிமென்ட் செங்கல் கொண்டு வந்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாமகவினர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், முதல் தவணையாக ரூ.5 லட்சம் செலுத்தினர். பின்னர், 10 நாட்கள் அவகாசம் கேட்டு மீதமுள்ள ரூ.33 லட்சத்தை கட்டிவிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் மீதமுள்ள வாடகை பாக்கியை இது வரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா பெயரில் உள்ள ஐஸ் பேக்டரி சீல் வைக்க துறைமுக மேலாண்மைக்குழு சிஇஓ துரைமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் இன்று வந்தனர். சிமென்ட் செங்கல் வைத்து கட்டி ஐஸ் பேக்டரிக்கு சீல்வைத்தனர். இந்த சம்பவத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post சென்னை துறைமுகத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் அன்புமணி ராமதாஸ் மனைவி பெயரில் இயங்கிய ஐஸ் பேக்டரிக்கு அதிரடி சீல்: காசிமேடு பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: