செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கத்தில் இல்லம்தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்


செங்கல்பட்டு: சென்னையில் உள்ள அரசு சுகாதாரத்துறை அலுவலகத்தில் 16 அம்ச கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கச் சென்ற இல்லம்தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்களை செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாத ஊதியம் ரூ10 ஆயிரம் வழங்க வேண்டும், ஊதியத்தை மகளிர் திட்டத்தின் கீழ் வழங்குவதை கைவிட்டு, ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து இஎஸ்ஐ, பிஎப் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும், பணி நேரத்தில் விபத்தில் மரணமடைந்த ஸ்ரீபெரும்புதூர் சரண்யா குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

ஊழியரின் பேறுகாலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதியாக ஆண்டுக்கு இரண்டு செட் சீருடைகள், அடையாள அட்டை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க பேருந்திகளில் சென்னை நோக்கி வந்தனர். இதனை அறிந்த போலீசார் மக்களைத் தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று சென்னை நோக்கி பேருந்துகளில் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புலிப்பாக்கம் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, மக்களைத் தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்கள் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் சாலை மறியலை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கத்தில் இல்லம்தேடி மருத்துவம் ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: