பல முறை கண்டித்தும் மனைவியுடனான கள்ளக்காதலை விடாததால் வீடு புகுந்து மகள் கண் முன்பே தந்தை கழுத்து அறுத்து படுகாலை: தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: மயிலாப்பூரில் மனைவியுடனான கள்ளக்காதலை பல முறை கண்டித்தும் கைவிடாததால், வாலிபர் அவரது மகள் கண் முன்பே கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் புதிய ஹவுசிங் போர்டு 6வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா(36). இவருக்கு மனைவி கிரேசி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். பிரசன்னாவுக்கு டுமிங்குப்பம் செல்வராஜபுரம் பகுதியை சேர்ந்த டொமினிக்(38) என்பவரின் மனைவி சசிகலா(35) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்தது.

இந்த கள்ளக்காதல் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்துள்ளது. இதனால் பிரசன்னா, டொமினிக் வீட்டில் இல்லாத போது, சசிகலாவுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம். இதை டொமினிக் பல முறை தனது மனைவியுடன் பிரசன்னா தனிமையில் இருப்பதை பார்த்து இருவரையும் கண்டித்து வந்துள்ளார். அதோடு இல்லாமல் டொமினிக், பிரசன்னா வீட்டிற்கு சென்று அவரது மனைவி கிரேசியிடம் கூறி கண்டித்து வைக்கும்படி தகராறும் செய்து வந்துள்ளார். இதனால் கிரேசி அவரது கணவரை பலமுறை கண்டித்தும் சசிகலாவுடனான கள்ளக்காதலை கைவிடாமல் பிரசன்னா இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கிரேசி ஒரே வீட்டில் கணவனுடன் வாழ்ந்து வந்தாலும், கணவன் பிரசன்னாவிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் பிரசன்னா நேற்று மதியம் சசிகலா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சசிகலாவின் கணவர் டொமினிக் பார்த்துவிட்டு இருவரையும் கடுமையாக கண்டித்துவிட்டு, நேராக பிரசன்னா மனைவி கிரேசியிடம் நடந்த சம்பவத்தை கூறி தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை டொமினிக் தனது நண்பர்கள் 2 பேரிடம், பல முறை கண்டித்தும் எனது மனைவியுடனான கள்ளக்காதலை பிரசன்னா கைவிட மறுத்து வருகிறார். என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் என்று கூறி அழுதுள்ளார். அப்போது டொமினிக் நண்பர்கள் இதற்கு பிரசன்னாவை கொன்றால் மட்டும் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லை என்றால் கடைசி வரைக்கும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் டொமினிக், பிரசன்னாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கு அவரது நண்பர்களும் உதவியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையே தனது கணவர் பிரசன்னாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. எனவே பிரசன்னாவை அழைத்து சசிகலாவுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்து தன்னுடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கும் படி நேற்று மாலை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் கிரேசி புகார் அளித்தார். பிறகு காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவன் பிரசன்னா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்து விட்டு வருவதற்குள் யார் கொலை ெசய்தார்கள் என்று தெரியாமல் அழுது துடித்தார்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு கிரேசி தனது கணவர் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக செல்போன் மூலம் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் பிரசன்னா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் கிரேசி தனது கணவர் நிலையை கண்டு அழுது துடித்து கொண்டிந்த போது, கிரேசியின் இளைய மகள்,‘ அம்மா அப்பா தானாக சாகவில்லை, டொமினிக் மாமா உடன் 2 பேர் வந்தனர். டொமினிக் மாமா உங்கள் அப்பா எங்கே என்று என்னிடம் கேட்டார். நான் உள்ளே தூங்குகிறார் என்று கூறினேன். உடனே டொமினிக் மாமா மற்றும் 2 பேர் உள்ளே சென்று அப்பாவுடன் சண்டை போட்டனர். பிறகு டொமினிக் மாமா கத்தியால் அப்பாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்’ என்று கூறினார்.

அதைகேட்டு கிரேசி அதிர்ச்சியடைந்தார். உடனே மகள் அளித்த தகவலை போலீசாரிடம் கிரேசி கூறினார். அதேநேரம் போலீசார் நடத்திய விசாரணையில் கிரேசி வீட்டிற்கு டொமினிக் வந்து சென்றதும் உறுதியானது. அப்போது போலீசாரிடம் கிரேசி ‘எனது கணவரை உடனே நீங்கள் அழைத்து கண்டித்து இருந்தால் இன்று அவர் உயிரோடு இருந்து இருப்பாரே’ நான் எப்படி 3 குழந்தைகளை வைத்து வாழப்போகிறேன் என்று தெரியவில்லையே என்று கூறி அழுதுள்ளார். அதைதொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு நண்பர்களுடன் தப்பி சென்ற டொமினிக்கை தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது பரபரப்பாக காணப்படும் பகுதியில் மகள் கண் முன்பே தந்தை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பல முறை கண்டித்தும் மனைவியுடனான கள்ளக்காதலை விடாததால் வீடு புகுந்து மகள் கண் முன்பே தந்தை கழுத்து அறுத்து படுகாலை: தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: