அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் மின்தடை லிப்டில் இருந்து வெளியில் வர முயன்ற முதியவர் பரிதாப பலி


பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் இ பிளாக் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன் (60). அதே பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு சதீஷ் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். கணேசன் நேற்று மாலை, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இருந்து 10வது மாடிக்கு செல்ல லிப்ட்டில் சென்றார். 6வது மாடிக்கும், 7வது மாடிக்கும் இடையே சென்றபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால், லிப்ட் இடையே நின்றுவிட்டது. இதையடுத்து கணேசன் லிப்டில் இருந்த போன் மூலமாக லிப்ட் ஆபரேட்டர் சாமுவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சாமுவேல் 6வது மடுக்கு வந்து லிப்ட் கதவை திறந்தார். அப்போது, கணேசன் லிப்டில் இருந்து வெளியேற முயன்றபோது, நிலைதடுமாறி லிப்ட் சேம்பரில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு விரர்கள் கணேசனின் உடலை மீட்டனர். பின்னர், போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை அறிந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு லிப்ட் அடிக்கடி பழுதடைவதாகவும், மின்சார வசதி முறையாக இல்லை என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் மின்தடை லிப்டில் இருந்து வெளியில் வர முயன்ற முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: