×

நாளைய தலைமுறை சிறப்புகளை அறிந்து கொள்ள கோயிலில் கோபுரமாய் உருவான கற்பகவிருட்சம்

*பலன்களை அள்ளித்தரும் பனைக்கு மரியாதை

*ராசிபுரம் அருகே கவனம் ஈர்த்த கிராம மக்கள்

ராசிபுரம் : கற்பக விருட்சமாய் பல்வேறு பலன்களை நமக்கு அள்ளித்தருகிறது பனைமரம். இதன் சிறப்புகளை நாளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம். இதற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிராம மக்கள் கோயிலில் கோபுரமாய் பனைமரச்சிற்பம் அமைத்திருப்பது கவனத்ைத ஈர்த்துள்ளது. அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதம் கொண்டது பனைமரம். பனைமரத்தின் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை, கூடை முடையவும், பாய் பின்னவும் உதவுகிறது. பச்சை மட்டை வேலிஅமைக்கவும், நார் எடுக்கவும் உதவுகிறது. பனங்காய் நுங்கும், பனம்பழமும் தருகிறது.

பனங்கொட்டை, கிழங்காக மாறி உண்ணப்பயன்படுகிறது. பாளை, பதநீர் பெற உபயோகமாகிறது. ஓலை கூரை வேயவும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்கவும் உதவுகிறது. மட்டை பின்னவும் பயன்படுகிறது. உச்சிப்பகுதி, மரத்தொட்டி செய்ய உதவுகிறது. பத்தைமட்டை தும்பு எடுக்கவும், தரை தேய்க்கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது. நடு மரம், உத்திரம் செய்ய உதவுகிறது. தூர்ப்பகுதி, வட்ட வடிவிலான பத்தலாக பயன்படுகிறது.

வேர் மழைக்காலங்களில் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது. இப்படி அளவில்லாத நன்மைகள் தரும் கற்பக விருட்சமாய் திகழ்வது பனைமரம். தமிழ்நாட்டின் மாநிலமரம் என்ற பெருமையும் பனைக்கு உண்டு. பனையின் சிறப்பினை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற காலப்பேழை புத்தகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் பனைமரத்தோடு, பனைத்தொழிலாளர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது சமூகமேம்பாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராசிபுரம் அருகே கரையான்தின்னிபுதூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமகாசக்தி மாரியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீகன்னிமார் ஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகவிழா நேற்று நடந்தது. அப்போது கோயில் கோபுரத்திற்கு இணையாக அதற்கு அருகில் ஓலையுடன் கூடிய பனைமரம், நுங்ங்கு குலை, பனைமரம் ஏறும் தொழிலாளர் சிற்பங்கள், தத்துரூபமாக வடிவமைத்து வைத்திருந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த சிற்பங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது கிராமத்து மக்கள், பயபக்தியோடு வழிபட்டனர்.

இதுகுறித்து கிராமத்து முன்னோடிகள் கூறியதாவது: தற்போது நாடு எந்த அளவுக்கு நவீனவளர்ச்சி அடைகிறதோ, அந்த அளவிற்கு உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்த பல்வேறு புராதான சின்னங்களை வருங்கால சந்ததியினர் மறந்து வருகிறார்கள். அவர்களுக்கு இவற்றை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இதற்காகவே, கோயில்களிலும் பொது இடங்களிலும் பல்வேறு சிற்பங்களை, நமது முன்னோர் வடிவமைத்து வைத்துள்ளனர். அதேபோல், முன்னோர் வகுத்துக் கொடுத்த உணவு முறைகளும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டி, நமது உடலுக்கு வலுவூட்டியது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

அந்த வகையில் கிராமப்புறங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியும் தரக்கூடிய பனைமரங்கள் அதிகளவில் இருந்தது. அடி முதல் தளவு வரை மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த பனைமரம் தற்போது அழிவின் பிடியில் உள்ளது. பனைமரத்தினை குலதெய்வமாக கொண்டு அந்த தொழிலில் ஈடுபட்ட ஏராளமானோர் மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனர். நாளுக்கு நாள் இயற்கையான பனைமரத்தோப்புகளை அழித்து கட்டிடங்களும், தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அற்புதமான பனைமரம் குறித்த விழிப்புணர்வு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உருவாக வேண்டும்.

அதனை அடிப்படையாக கொண்டு நடக்கும் தொழில்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதை பிரதானமாக கொண்டு புதிய கோயிலில் பனைமரமும் நுங்கு குலையும், தொழிலாளர்களின் சிற்பமும் தத்ரூபமாய் வடிவமைத்துள்ளோம். இது கோயிலுக்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் பதிந்து பனையின் சிறப்புகளை உணர்த்திக் கொண்டே இருக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நாளைய தலைமுறை சிறப்புகளை அறிந்து கொள்ள கோயிலில் கோபுரமாய் உருவான கற்பகவிருட்சம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,
× RELATED கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு