போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மருந்தகங்களில் சிசிடிவி கேமராக்கள்: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்படுத்துதலை தடுக்கும் வகையில், மருந்தகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பணி இயக்கமும் இணைந்து, குழந்தைகள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்ட விரோத போதைப்பொருட்கள் கடத்தலையும் தடுக்கும் வகையில், `கூட்டு செயல் திட்டம்’ வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘H’, ‘H1’, மற்றும் ‘X’ அட்டவணை மருந்துகளை விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், மருந்தகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப்பதிவு செயல்பாடுகளை, மாவட்ட போதைப்பொருட்கள் தடுப்பு அதிகாரிகள், குழந்தை நல காவல் அதிகாரிகள், அவ்வபோது சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மருந்தகங்களில் சிசிடிவி கேமராக்கள்: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: