வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக ₹9 லட்சம் வசூலித்து மோசடி 2 கில்லாடிகள் சிக்கினர்

*தஞ்சாவூர் போலீசார் அதிரடி

தஞ்சாவூர் : வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக போஸ்டர் ஒட்டி நூதன முறையில் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள களஞ்சியம் நகர் இரண்டாவது தெருவில் ‘அலையன்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் ‘புருனேக்கு ஆட்கள் தேவை’ என்ற விளம்பரங்களை டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இவற்றை பார்த்த டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 40 பேர் அந்நிறுவனத்திடம் புருனே நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இந்நிறுவனத்தை திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த ராம்குமார், திருச்செந்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோர் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 40 பேரிடமும் அவர்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட், மருத்துவ சான்று மற்றும் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டனர். பின்னர் ஒரு மாதம் கடந்த நிலையில் அலுவலகத்தை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி. ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த ராம்குமார், கணேசமூர்த்தி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தாம்பரம், நாகர்கோவில், சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக ₹9 லட்சம் வசூலித்து மோசடி 2 கில்லாடிகள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: