அனுமதியின்றி செயல்பட்டதாக சீல் வைப்பு மன நல காப்பகத்தில் 20 உடல்கள் புதைப்பா? உரிமையாளர் – ஊழியர்களிடம் விசாரணை

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999ல் இருந்து டாக்டர் அகஸ்டின் (60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் காப்பகத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட கலைக்டர் அருணா உத்தரவின்படி கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மனநல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது முறையாக அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் செய்யாமலும், சுகாதாரமற்ற முறையிலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என 13 பேரை மீட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.  தொடர்ந்து காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்த காப்பகத்தில் 60 பேர் இருந்ததாகவும், அதன்பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாக உள்ளது.

இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பற்றிய எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை. மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்களை உடல் கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. இதையடுத்து உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் மனநல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த டாக்டர் அகஸ்டின் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்தது. முழு விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post அனுமதியின்றி செயல்பட்டதாக சீல் வைப்பு மன நல காப்பகத்தில் 20 உடல்கள் புதைப்பா? உரிமையாளர் – ஊழியர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: