பாஜ தலைவர்களின் கொலை மிரட்டல் பேச்சுகளால் ராகுலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டெல்லி போலீசில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜ தலைவர்கள் பேசி வரும் கருத்துக்கள் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொருளாளரும் கட்சியின் பொது செயலாளருமான அஜய் மாக்கன் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலைய அதிகாரியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை, வெறுப்புணர்வு, தீய எண்ணத்தை துாண்டும் விதமாக பாஜவும் , அதன் கூட்டணி தலைவர்களும் பேசி வருகின்றனர். இந்த பேச்சுக்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், கலவரம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசில் புகார் அளித்த பின்னர் அஜய் மாக்கன் கூறுகையில், மறைந்த இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி நாட்டுக்காக தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதற்கு பிறகும் தேஜ கூட்டணியில் உள்ள தலைவர்கள் இது போன்ற மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
பாஜ தலைவர்களின் இந்த பேச்சுக்கள் ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவர்கள் பேசி வருகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ தலைவர்கள் தர்விந்தர் சிங் மார்வா, ரவ்னீத் சிங் பிட்டு, உபி அமைச்சர் ரகுராஜ் சிங் மற்றும் சிவசேனா(ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

The post பாஜ தலைவர்களின் கொலை மிரட்டல் பேச்சுகளால் ராகுலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டெல்லி போலீசில் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Related Stories: