பாரத மாதா தான் ஒவ்வொரு இந்தியனின் குரல்: ராகுல்காந்தி உருக்கம்

புதுடெல்லி: பாரத மாதா தான் ஒவ்வொரு இந்தியனின் குரல் என்று ராகுல்காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமீபத்தில் காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு சென்று இருந்தார். அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரி பூமியின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும் என்று எனது தந்தை ராஜீவ் காந்தி என்னிடம் ஒருமுறை கூறினார். அப்போதிருந்து, லடாக்கிற்குச் செல்ல ஏங்கினேன். பாரத ஒற்றுமை யாத்திரை சென்ற போது லடாக்கிற்கு ​​மோட்டார் சைக்கிளில் செல்வதை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்று நினைத்தேன். ஒரு பயணத்தில் அனைத்து வகையான கண்டுபிடிப்புகளும் உள்ளன. மேலும் நம்பமுடியாதது லடாக் மக்களின் அன்பும் பணிவும் ஆகும்.

லடாக் இந்தியாவின் கிரீடங்களில் ஒன்றாகும். உலகின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். அங்குள்ள மக்களின் கண்களில் வெறுப்பு உணர்வைக் கண்டு என் இதயம் உடைந்தது. லடாக்கில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி பொய் சொன்னபோது அவர்களுக்கு துரோகம் செய்ததாக உணர்ந்தார்கள். பாஜ அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றத் தவறியதால், அவர்கள் ஏமாற்றி விட்டதாக உணர்கிறார்கள். ஒரு அரசு அதன் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். லடாக்கிற்கு நல்லாட்சி தேவை. பாரத மாதா ஒவ்வொரு இந்தியரின் குரலாகவும் இருக்கிறார். லடாக்கின் குரலை வலுப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மேலும் பாங்காங் த்சோ ஏரி மற்றும் லடாக்கின் கரடுமுரடான பகுதிகள் மற்றும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு வழியாக, பைக் ஓட்டும் குழுவுடன் ராகுல் காந்தி சென்றதை வீடியோ காட்டுகிறது. லடாக்கை சுற்றியுள்ள பல்வேறு குழுக்களுடன் ராகுல் பேசி அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அதுபற்றி ராகுல் கூறும்போது,’ காந்தியின் சித்தாந்தம் மற்றும் காங்கிரஸின் சித்தாந்தம் லடாக்கின் ரத்தத்திலும், டிஎன்ஏவிலும் உள்ளது என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், உங்களின் முக்கிய பிரச்னைகளை எழுப்புவேன் என்று உறுதி அளித்தேன்’ என்று கூறியுள்ளார்.

The post பாரத மாதா தான் ஒவ்வொரு இந்தியனின் குரல்: ராகுல்காந்தி உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: