எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் ஆடி 4வது வெள்ளி உற்சவ விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், காலை 7 மணியளவில் குளக்கரையில் இருந்து கரகத்துடன் அம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 10 மணி அளவில் கோயில் வளாகம் அருகே தீமிதி திருவிழா நடைபெற்றது.அதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எல்லை அம்மன் பக்தர்கள் தோளில் சுமந்தபடி தீமிதித்தனர். பின்னர், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, 12 மணி அளவில் தீ குண்டத்தில் பழுக்க காய்ச்சப்பட்ட இரும்பு பட்டயத்தில் பக்தர் ஒருவர் கையால் அடித்து மழுவடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் ஊஞ்சல் சேவையும், 8 மணி அளவில் எல்லையம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தமிழரசி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் சாவித்திரி சங்கர், துணை தலைவர் மல்லிகா மணி, ஆலய அர்ச்சகர்கள் திருமலை ஐயர், ஹரி ஐயர் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: