மாமல்லபுரத்தில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் கோவளம் சாலையில் இசிஆர் நுழைவு வாயில் பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில், நேற்று 2வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவல் நிலையம் எதிரில் இருந்து கிழக்கு ராஜவீதி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது.

இதில், பேரூராட்சி ஊழியர்கள் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணை தாசில்தார் சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம், சாலை ஆய்வாளர் சங்கர், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்கள், துணி கடைகள், பெட்டி கடை, தள்ளு வண்டி கடை, காய்கறி கடை, பேக்கரி, மாலை கட்டும் கடை, டீ கடை, போண்டா, பஜ்ஜி கடைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

அப்போது, கடைகாரர்கள் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துணை தலைவர் ராகவன் ஆகியோர் முதலில் சாலையை அளவீடு செய்து, பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, அளவீடு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று காலை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: