தடுப்பணைகள் கட்டுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க நடவடிக்கை: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஆத்தூர் ஜெயசங்கரன் (அதிமுக) கிள்ளியூர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), பண்ருட்டி வேல்முருகன் (தவாகா), குளித்தலை மாணிக்கம் (திமுக), உத்திரமேரூர் சுந்தர் (திமுக), பரமக்குடி முருகேசன் (திமுக), பேராவூரணி அசோக்குமார் (திமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு: வில்வனூரில் வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை அமைக்க முதுநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த இடம் தடுப்பணை அமைக்க ஏதுவாக உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கிள்ளியூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். அந்த உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்ருட்டியில் தடுப்பணை உடைந்து 5 பேர் இறந்ததாக வேல்முருகன் கூறியுள்ளார். தடுப்பணை உடைந்து 5 பேர் இறக்க முடியுமா?. உங்கள் கேள்வியில் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக இதை சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். முக்கிய தடுப்பணை திட்டங்கள் குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். இரண்டு ஆண்டுகளில் அந்த தடுப்பணைகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்கினியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் தடுப்பணைகள் வேண்டும் என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கால்வாயில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம்தேதி உடைப்பு ஏற்பட்டது. அது தற்காலிகமாக சீரமைப்பு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பரில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. நிரந்தரமாக அதில் உடைப்பு ஏற்படதாவாறு தடுக்க ரூ.1.4 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. 15, 20 நாட்களில் அந்த பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் பேசினார்.

* பேரவையில் இன்று…
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் பேசுவார்கள். தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர்.

மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதில் அளித்து பேசுகின்றனர். துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.

* “சட்டப்பேரவை பொதுக்கூட்ட மேடையாகி விடக்கூடாது”
சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘அவை நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதை உணர முடிகிறது. இது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக்கி விடக்கூடாது. அவர்களே…இவர்களே.. என்று பெயரைச்சொல்லி பேசுவது நல்ல மரபல்ல. அதை சபாநாயகர்தான் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார். உடனே, சபாநாயகர் மு.அப்பாவு, \‘‘அவை முன்னவரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று பதில் தெரிவித்தார்.

* கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
திருசெங்கோடு ஈஸ்வரன் (கொமதேக), கல்வராயன்மலை தற்போது கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையை மாற்றி கல்வராயன் மலையை சுற்றுலாதலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டார். அதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பதிலளித்து கூறும்போது, கல்வராயன் மலை பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகும். சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரின் உத்தரவை பெற்று நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

* அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை ஜெயில் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான்
சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை மானிய கோரிக்கை மீது எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: மத்திய சட்டத்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கும் கோரிக்கை மனு மத்திய நீதித்துறையின் மறுபரிசீலனையில் உள்ளது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
வேல்முருகன்: சிறைச்சாலைகளில் கேன்டீன்களில் முறையான உணவுகள் வழங்கப்படுவதில்லை.
அவை முன்னவர் துரைமுருகன்: ஜெயில் பத்தியே பேசிட்டு இருப்பது, நல்லா இல்ல. வாயில் வர கூடாது. எம்பி, எம்எல்ஏ, பிரதமர் என யாராக இருந்தாலும் உள்ளே போய்ட்டா எல்லாம் ஒன்றுதான்’என வேல்முருகனை பார்த்து கூறியபோது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் அதிகம் நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதற்கு, ‘தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்னையை ஜாதி கலவரமாக பேசக்கூடாது’’ என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

The post தடுப்பணைகள் கட்டுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க நடவடிக்கை: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: