பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு: 15 முருகனடியார்கள் பெயரில் விருது

பழநி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழநியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். இதில், ஆதீனங்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் 3ம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இந்நகரில் இந்து சமய அறநிலையத்துறை மூலம், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக பழநியில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் பிரமாண்ட மேடை, கலை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பழநியாண்டவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இன்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் ஆதீனங்கள், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் மாநாட்டு கொடி ஏற்றினர். அதன்பின் அமைச்சர் ஐ.பெரியசாமி கண்காட்சியை துவக்கி வைத்தார். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் ஆகியோர் வேல்கோட்டத்தை துவக்கி வைத்தனர். காலை 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரம் இறை வணக்கம் பாடினார்.

9.45 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி, தருமபுரம், திருவண்ணாமலை, மதுரை, மயிலம்பொம்மர ஆதீனங்கள் பேசினர். மாநாட்டில் விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நீதியரசர்கள் சுப்ரமணியன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பிரசாத பைகள் இலவசம்:மாநாட்டை பார்வையிட்டுச் சென்ற பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் 200 கிராம் அளவுள்ள பஞ்சாமிர்தம், லேமினேட் செய்யப்பட்ட முருகன் படம், விபூதி, குங்குமம் மற்றும் லட்டு அடங்கிய பிரசாத பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதேபோல நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டின் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.வேல்முருகன் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்களுக்கு நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழ கவிராயர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

The post பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு: 15 முருகனடியார்கள் பெயரில் விருது appeared first on Dinakaran.

Related Stories: