ஆட்டோ டிரைவருக்கு ₹100 கடன் பாக்கி 30 வருடத்துக்கு பின் ₹10 ஆயிரமாக திருப்பிக் கொடுத்த ஆசிரியர்

திருவனந்தபுரம்: 30 வருடங்களுக்கு முன் ஆட்டோவில் சென்றதற்காக ₹100 கடன் சொன்ன ஆசிரியர், 30 வருடங்களுக்குப் பின் ஆட்டோ டிரைவரை சந்தித்து அதை ₹10 ஆயிரமாக திருப்பிக் கொடுத்தார். தற்போதைய காலத்தில் வாங்கிய கடனை எப்படி கொடுக்காமல் இருக்கலாம் என்பது குறித்துத் தான் பலரது சிந்தனையாக இருக்கும். சிலர் கடன்காரர்களை பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இந்நிலையில் கேரளாவில் 30 வருடங்களுக்கு முன் ஆட்டோவில் சென்றதற்காக கடன் சொன்ன தொகையை 100 மடங்காக ஆசிரியர் ஒருவர் திருப்பிக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஜித். இவர் பள்ளி ஆசிரியராக உள்ளார். கடந்த 1993ம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியிலுள்ள ஒரு கல்லூரியில் இவர் பிஎட் படித்து வந்தார்.

அப்போது மூவாற்றுபுழா அருகே உள்ள மங்கலத்துநடை என்ற இடத்தை சேர்ந்த தன்னுடைய நண்பரை பார்ப்பதற்காக அஜித் சென்றுள்ளார். நண்பரின் வீட்டிலிருந்து திரும்பும் போது மூவாற்றுபுழா செல்ல பஸ் கிடைக்கவில்லை. அங்கிருந்துதான் சங்கனாச்சேரிக்கு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மூவாற்றுபுழாவுக்கு செல்லாவிட்டால் சங்கனாச்சேரிக்கு செல்ல பஸ் கிடைக்காது. ஆட்டோ பிடித்ததால் மட்டுமே சங்கனாச்சேரிக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கையில் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே அஜித்திடம் இருந்தது. வேறு வழி இல்லாமல் மங்கலத்துநடை பகுதியில் நின்று கொண்டிருந்த பாபு என்ற ஆட்டோ டிரைவரை அணுகி, மூவாற்றுபுழா செல்ல எவ்வளவு வேண்டும் என்று அவர் கேட்டார். ₹100 ஆகும் என்று ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.

தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்றும், கடனாக வைத்துக்கொண்டு மூவாற்றுபுழாவில் தன்னை விட முடியுமா என்று ஆட்டோ டிரைவரிடம் அஜித் கேட்டார். அதற்கு அவரும் சம்மதித்தார். இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்டோ டிரைவர் பாபுவின் வீட்டுக்கு அஜித் சென்றார். தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று பாபுவிடம் அஜித் கேட்டார். சுத்தமாக ஞாபகம் இல்லை என்று பாபு கூறினார். 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை அஜித் அவருக்கு நினைவுபடுத்தினார். உடனே ஆட்டோ டிரைவர் பாபுவுக்கு அப்போது நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

இதன்பின் பாபுவிடம் அஜித் ஒரு கவரை கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது ₹10 ஆயிரம் பணம் இருந்தது. 30 வருடங்களுக்கு முன் கடன் சொன்ன ஆட்டோ கூலி ₹100க்கு 100 மடங்காக அஜித் திருப்பிக் கொடுத்தார். 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்குப் பின்னர் ஆட்டோ டிரைவரை கண்டுபிடிக்க பல முறை முயற்சித்ததாகவும், பெயர் மறந்து போனதால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இவ்வளவு காலதாமதமானது என்றும் அஜித் கூறினார்.

The post ஆட்டோ டிரைவருக்கு ₹100 கடன் பாக்கி 30 வருடத்துக்கு பின் ₹10 ஆயிரமாக திருப்பிக் கொடுத்த ஆசிரியர் appeared first on Dinakaran.

Related Stories: