ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: