அருணாச்சல் முதல்வர் உட்பட 5 பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு? இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

இட்டாநகர்: போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்படாததால், அருணாச்சல் முதல்வர் உட்பட 5 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர். லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் 15 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் நான்கு பாஜக வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்ததும், அவர்கள் 5 பேரும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறுகையில், ‘ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தலா ஒரு வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்குள் மேலும் சில இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றார். ஏற்கனவே மூன்று முறை போட்டியின்றி வெற்றி பெற்ற பெமா காண்டு, தற்போது நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுவார். இவர் தவாங் மாவட்டம் முக்டோ தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 29 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.

The post அருணாச்சல் முதல்வர் உட்பட 5 பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு? இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை appeared first on Dinakaran.

Related Stories: