ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். உறுதி அளித்தபடி ஆருத்ரா நிறுவனம் நடந்து கொள்ளாமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரிஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக அந்த கட்சி நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரிஷ் வாக்குமூலம் அளித்துள்ளர். மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் ராஜா செந்தாமரை, முத்து சகோதரர்கள் ஜி.கே.எம்.டிரேடிங் என்ற நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளனர். காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்துக்கு முக்கிய முகவராக ராஜா செந்தாமரை செயல்பட்டு வந்துள்ளார். பொதுமக்களிடம் ராஜா செந்தாமரை ரூ.600 கோடி வசூலித்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: