ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

சென்னை : ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்துபோன பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருக்கிறார் என கருதியே அவரைப் பழித் தீர்த்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் .இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்தியுள்ள செம்பியம் போலீசார் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், 11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் வாங்கப்பட்டது? யாருக்கெல்லாம் தொடர்பு என காவல்துறை 11 பேரிடம் விசாரித்து வருகிறது. வேறு யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதா எனவும் 11 பேரிடமும் தனித்தனியாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..இந்த விசாரணை மூலம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்து கொலையாளிகள் காத்திருந்துள்ளனர் எனவும் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் அம்பலம் ஆகி உள்ளது. அதே நேரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு என்கிற வினோத்தின் வங்கிக் கணக்குகளும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. இதனிடையே கொலையாளிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: