அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!!

அரியலூர் : அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வெடி தயாரிப்பு கடையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் வெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பதால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 7 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. உடல்கள் அனைத்தும் சிதறி கிடப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கலாக உள்ளது. விபத்தில் லேசான காயம் அடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் பலத்த காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான அளவில் வெடி பெருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: