இந்த நிலையில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் முர்துல் வரும் 21ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஒன்றிய நீதி மற்றும் சட்டத்துறை பரிசீலித்து ஜனாதிபதிக்கு அனுப்பும். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தவுடன் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பார்.
நீதிபதி டி.கிருஷ்ணகுமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1963 மே மாதம் பிறந்தார். தாராபுரத்தில் பள்ளி படிப்பு, சென்னை மாநில கல்லூரியில் பட்ட படிப்பு பின்னர் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு முடித்து 1987ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியிடம் ஜூனியராக சேர்ந்த இவர் ரிட் வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். கல்வித்துறை தொடர்பான வழக்குகளில் திறமை பெற்றவர். கடந்த 1991 முதல் 1996வரை அரசு வழக்கறிஞராகவும், 2001 முதல் 2006வரை ஆசிரியர் தேர்வு வாரியம், கோவை மாநகராட்சி ஆகியவற்றின் வழக்கறிராகவும், 2013 முதல் 2016வரை அரசு சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2016 ஏப்ரல் 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இவர் 2025 மே 22ம் தேதிவரை பதவியில் இருப்பார். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறையும்.
The post மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.