35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி;
இந்தாண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியம் பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் சிறுதானியப் பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் சிறுதானியங்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.இது குறித்து சாயல்குடி விவசாயிகள் கூறுகையில், ‘நெல் மட்டுமே பயிரிட்டு வந்தோம். அதற்கு களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் என கூடுதலாக பணம் செலவழித்தும் போதிய மழையின்றி ஆண்டுதோறும் விவசாயம் பொய்த்துப் போனது. தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தோம். இதனால், குறைந்தளவு பராமரிப்பு செலவுள்ள சோளம் வகைகள், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியப் பயிர்களை கடந்தாண்டு பயிரிட்டோம். தொடர்மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, நல்ல மகசூல் கிடைத்தது. இந்தாண்டு தரிசு நிலங்களை சீரமைத்து கூடுதலாக சிறுதானியங்களை பயிரிட்டோம். தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு எட்டி விட்டும்.
ஆனால், சிறுதானியங்களை உலர வைத்தல், பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு உலர்களம் கிராமங்களில் இல்லை. சாலையில் போட்டு உலர்த்துவதால் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. சிறுதானியப் பயிர்களை அரசு நேரடி கொள்முதல் செய்வது கிடையாது. எனவே, சிறுதானியங்களை விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையில் அரசு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், கிராமங்கள்தோறும் சிறுதானிய பயிர் உலர்களம் அமைக்க வேண்டும்’ என்றனர்.
காலை வாரும் காட்டுப்பன்றிகள்;
கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதியில் உள்ள ஆறு, ஓடை வழித்தடங்களில் காணப்படும் சீமை கருவேல மரக்காட்டில் காட்டுப்பன்றிகள் அதிகமாக உள்ளன. இவைகள் சிறுதானிய பயிர்களை அழித்து நாசமாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்’ என்றனர்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த மழையால் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி: 15 நாட்களில் அறுவடைக்கு ரெடி; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.