பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ மீதான அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமித் ஷா போன் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் தான் அவரை மீண்டும் பாஜவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தவகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் ஜெகதீஷ் ஷெட்டருக்கு போன் செய்து 10 நிமிடம் பேசியிருக்கிறார். அப்போது, அவரை மீண்டும் பாஜவில் சேர அமித் ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.
*ஜெகதீஷ் ஷெட்டர் டிஎன்ஏ காங்கிரசுக்கு பொருந்தாது: சி.டி.ரவி சொல்கிறார்
கர்நாடகா பா.ஜ முக்கிய தலைவர் சி.டி.ரவி முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரடியாகவே பாஜவிற்கு வரும்படி அழைத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய பாஜ மாநில முன்னாள் தலைவர் சி.டி.ரவி, ஜெகதீஷ் ஷெட்டரின் டி.என்.ஏ காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவுடன் பொருந்தாது. அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோர் ஜன சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இருந்திருக்கின்றனர். ஷெட்டர் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவரது டி.என்.ஏ காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவுடன் பொருந்தி போகாது என்பதால் அவரால் அங்கு நீடிக்க முடியாது என்று சி.டி.ரவி கூறியுள்ளார்.
The post கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு appeared first on Dinakaran.