மதுராந்தகம்: மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று விடியற்காலை கொட்டித்தீர்த்த கனமழையால், அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்தும், இரவு நேரங்களில் மழையும் பெய்தும் வந்தது. நேற்று முன்தினம் விடியற்காலை இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. மேலும், ஆடி மாதத்தில் எப்பொழுதும் பெய்யாத அளவிற்கு மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் மிக கனமழை கொட்டித் தீர்த்ததால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும், மதுராந்தகம் எண்டத்தூர் சாலையில் பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதை கண்ட பொதுமக்கள், ஆடி மாதத்தில் இப்படி ஒரு மழைவெள்ள சேதத்தை கண்டதில்லை எனக்கூறி ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.
இந்த, மழை காரணமாக மதுராந்தகம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வெள்ள சேதம் குறித்து கணக்கீடு செய்து, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்ளாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள புதுப்பேட்டை விநாயகர் கோயில் தெரு, ஸ்ரீராம் நகர், செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த பகுதியை ஒட்டியுள்ள திருச்சி சென்னை – சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நெடுஞ்சாலையின் கீழ் செல்லும் மழைநீர் வடிகால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக, மழை வெள்ளநீர் தேசிய நெடுஞ்சாலையின் கீழே செல்லும் பெரிய பைப்புகள் மற்றும் பாலங்கள் வழியாக சென்று, அருகில் உள்ள வெங்கடேசபுரம் ஏரியல் சேர முடியாமல் இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புதுப்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வீட்டில் இருந்து வெளியில் வருவதும் வெளியில் இருந்து வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.
* கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம்
அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைநீர் வீடுகளில் புகுந்ததற்கு முக்கிய காரணம் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்தினர்தான். அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மழைநீர் வடிகால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பதை அவர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல தடையாக உள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வெள்ளநீர் வடிகால்வாய்களை முறையாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post மதுராந்தகம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் வேதனை, வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.