×

புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்(66) மதுரையில் உள்ள வீட்டின் குளியலறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்தார். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார் இந்திரா சௌந்தரராஜன்.

ஆன்மிக சொற்பொழிவு, திரைப்படங்கள், நாவல்கள் போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர். இந்திரா சௌந்தரராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். அவள் ஒரு சாவித்ரி, ஸ்ரீபுரம், எங்கே என் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் மறைவு அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

* முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.

வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களிலும் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Indira Choundararajan ,Chennai ,Chief Minister ,Indira Soundararajan ,Madura ,
× RELATED வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்...