×

திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு விவகாரம் ஆன்லைன் வகுப்பு நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 26ம்தேதி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு 42 மாணவிகளுக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி வளாகத்தில் நவீன இயந்திரங்கள் மூலம் சோதனை செய்தனர். ஆனால் வாயு கசிவு எப்படி ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 4ம்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியபோது மீண்டும் 9 மாணவிகள் திடீரென வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வாயு கசிவு எப்படி ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியாமல் எப்படி பள்ளியை திறந்தீர்கள் என கேட்டு பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதம் செய்தனர்.

அடுத்தடுத்து இருமுறை, வாயு கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி செயல்படாது என அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நவீன இயந்திரங்களை கொண்டு பள்ளி வளாகத்தில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 நாள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாசு கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் தனியார் பள்ளி இயக்குனரக அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் மேற்கண்ட தனியார் பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளியை திறப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால், பெற்றோர் கோரிக்கை அடிப்படையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொதுதேர்வில் பாதிப்பு ஏற்படாமலிருக்க சில தினங்களாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி திறக்கப்படும் வரை மற்ற வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

The post திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு விவகாரம் ஆன்லைன் வகுப்பு நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvotriur ,Thiruvotiyur ,Thiruvotripur ,
× RELATED பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி...