×

மீஞ்சூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் பலி: மற்றொருவர் படுகாயம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே நேற்றிரவு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் பாதசாரி மற்றும் பைக்கை ஓட்டி வந்தவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பைக்கில் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீஞ்சூர் அருகே திருவெள்ளைவாயல், மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அழகிரி (53). கூலித்தொழிலாளி.

நேற்றிரவு திருவெள்ளைவாயல் பஜாரில் இருந்து பழவேற்காடு சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காட்டூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இவ்விபத்தில், சாலையில் நடந்து சென்ற அழகிரியின் கால் துண்டாகி, படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (28) என்ற வாலிபரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்டார்மடம் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (28) என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த அழகிரி, சஞ்சய் ஆகிய 2 பேரையும் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்தில் பலியான இருசக்கர வாகன ஓட்டி விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பாதசாரி அழகிரி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மீஞ்சூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் பலி: மற்றொருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Meenjur ,Dinakaran ,
× RELATED உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்: மீஞ்சூர் அருகே சோகம்