×

புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் எடப்பாடியின் ஆணவத்தை தோற்கடித்துக் கொண்டே இருப்போம்: விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொண்டார். நேற்று கன்னிசேரி புதூரில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். 2வது நாளாக இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:விருதுநகர் பெயரை சொன்னதும் காமராஜர் நினைவுக்கு வருவார். காமராஜர் பெயர் சொன்னால் பல நினைவுகள் வரும். எனது திருமணத்திற்கு காமராஜர் வருகை தர அவரது இல்லம் தேடி சென்று கலைஞர் அழைப்பு விடுத்தார். உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் திருமணத்திற்கு வந்து என்னையும், என் மனைவியையும் வாழ்த்தினார்.

காமராஜர் மறைந்தபோது, மகன்போல் இறுதி நிகழ்ச்சி நடத்தியவர் கலைஞர். அரசு மரியாதையுடன் உடல் அடக்கம், காமராஜருக்கு சென்னையில் சாலை, நெல்லையில் சிலை, காமராஜரின் செயலாளர் வைரவனுக்கு பணி, வீடு ஒதுக்கப்பட்டது. காமராஜர் சகோதரி நாகம்மாளுக்கு கலைஞர் நிதியுதவி வழங்கினார். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து போற்றினார்.

விருதுநகர் மாவட்டத்தில் 1286 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. சமூக நலத்திட்டங்கள் மூலம் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவிகள் உயர் கல்விக்கு விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரி 33 சதவீதம், தமிழ்நாட்டில் இது 60 சதவீதம். விருதுநகரிலோ 95 சதவீதம். இது புதுமைப்பெண், தமிழ்புதல்வன், கல்லூரி கனவு திட்டங்களால் சாத்தியமாகி உள்ளது.

கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலை ஆய்வுக்கு சென்றேன். பட்டாசு தொழிலாளர்கள் சில கோரிக்கைகள் வைத்தனர். இதன்படி, விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியாகும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் உறுதி செய்ய கலெக்டர் தலைமையில் நிதியம் உருவாக்கப்படும். இதற்கென அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியத்திற்கு வழங்கப்படும்.

தீப்பெட்டி, அச்சு தொழிற்சாலைகள் முன்னணியில் இருந்தாலும், கண்மாய் நீர்நிலைகளை நம்பி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் உள்ளது. இதற்காக காரியபாட்டி, திருச்சுழி கண்மாய்கள் ரூ.17 கோடியில் மேம்படுத்தப்படும். மாவட்டத்தில் கவுசிகா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் ரூ.41 கோடியில் சீரமைக்கப்படும். வத்திராயிருப்பு, ராஜபாளையம் கண்மாய்கள் ரூ.18.10 கோடியில் புனரமைக்கப்படும். கலங்காபேரி, வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி அணைகள் ரூ.23.30 கோடியில் மேம்படுத்தப்படும்.

ரூ.2 கோடியில் சுற்றுலா பூங்கா அமைக்கப்படும். அருப்புக்கோட்டையில் 400 ஏக்கரில் புதிய சிப்காட் மையம் ரூ.350 கோடியில் உருவாக்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் இன்னும் வேகமாக ஓட நினைக்கிறேன். இதைத்தான் அமைச்சர்கள், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன். இதற்காகவே மாவட்டம்தோறும் கள ஆய்வு நடத்துகிறேன்.

எடப்பாடி பழனிசாமி, கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை கோடிக்கணக்கில் செலவிட்டு நிறைவேற்றுவதாக சொல்லி வருகிறார். ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது என சொல்லலாம். அந்த அளவிற்கு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் பெயரில் எளிய மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்கி வருவதை நான் மணிக்கணக்கில் சொல்ல முடியும். எந்த திட்டத்தை மக்களுக்கு பயன்படாத திட்டம் என பழனிச்சாமி சொல்கிறார் என தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கம் பயன்படாத திட்டமா? தென்தமிழகத்தில் அறிவுச் சுரங்கமாக உள்ள மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையா?, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமா? உங்கள் ஆணவத்தை தோற்கடித்துக் கொண்டே இருப்போம்.வாய்த்துடுக்காக பேசி தொடர்ந்து அவர் தோல்விகளை சந்தித்து வருகிறார். கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து சென்ற உங்கள் பெயரை வைப்பதா? விடியல் பயணம், புதுமைப் பெண்கள் திட்டம் எல்லாமும் கலைஞர் பெயரை சொல்கிறது. கலைஞர் பிள்ளையாக மட்டுமல்ல, தொண்டனாக பெருமையாக கூறுகிறேன்.

கலைஞர் புகழ் இந்தியா முழுவதும் பரவியுள்ளது, பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. என்றும் எப்போதும் மக்களான உங்கள் வாழ்க்கை வளர்ச்சிக்காக எனது பயணம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ்கனி, ராணி குமார், எம்எல்ஏக்கள் ஏஆர்ஆர் சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் எடப்பாடியின் ஆணவத்தை தோற்கடித்துக் கொண்டே இருப்போம்: விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chief Minister ,M.K.Stal ,Virudhunagar ,M. K. Stalin ,Kannissery Puthur ,Collector's Office ,Virudhunagar Collectorate ,
× RELATED அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்: எடப்பாடி பழனிசாமி!