அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆணையர் பதவி ரத்து: பள்ளி கல்வித்துறை இயக்குநராக அறிவொளி நியமனம்

சென்னை: தமிழகத்தில், பள்ளி கல்வி இயக்ககம் இயக்குனர் பதவியை கடந்த அதிமுக ஆட்சியில் ரத்து செய்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. இதற்கு முன் இந்த நடைமுறை கிடையாது. முழு அதிகாரம் பள்ளி கல்வி துறை இயக்குநருக்குத்தான் இருந்தது. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆணையரை சந்திப்பதில் சிரமம் இருந்து வந்தது. மேலும், பள்ளி கல்வி துறையின் செயல் முறைகளில் பல பிரச்னைகள் காணப்பட்டது. உத்தரவுகள், சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் பல குளறுபடிகள் நடப்பதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவித்தன. மேலும், பள்ளிகளின் செயல்பாடுகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தது. மேலும் ஒன்றிய அரசு கொண்டு வந்த கல்வி திட்டங்களை மாநில அரசிலும் புகுத்த ஆணையர் திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இது சம்பந்தமாக ஒரு ஆய்வு மேற்கொண்டு, பள்ளி கல்வி துறையில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார்.

குறிப்பாக பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து, பள்ளி கல்வியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த ஆணையர் நந்தகுமார் (ஐஏஎஸ் அதிகாரி) மனிதவள மேம்பாட்டு துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டதை தொடர்ந்து, கடந்த 15 நாட்களாக அந்த பதவி காலியாகவே இருந்தது. இதற்கிடையே பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கும் ஆணையர் இல்லாமலே நடந்து முடிந்தது. கல்வி துறையில் ஆணையர் பதவி தொடர்ந்து நீடிக்குமா அல்லது முன்பு இருந்தபடி இயக்குநர் பதவி வருமா என்ற இழுபறி இருந்து வந்தது. இந்த இழுபறிக்கு முடிவு கட்டும் வகையில் தொடக்க கல்வி இயக்குநராக இருந்த அறிவொளியை பள்ளி கல்வி இயக்குனராக நியமித்து தமிழக அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தொடக்க கல்வி இயக்ககம், இயக்குநராக இருந்த க.அறிவொளி பள்ளி கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (சமக்ர சிக்‌ஷா) கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வரமுருகன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன் தொடக்க கல்வி இயக்கக இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மு.பழனிசாமி பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக இயக்குநராகவும், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் பெ.குப்புசாமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

அதேபோன்று மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்கக இணை இயக்குநர் த.ராஜேந்திரன் பள்ளி கல்வி இயக்கக (பணியாளர் குதி) இணை இயக்குநராகவும், பள்ளி கல்வி இயக்கக (பணியாளர் தொகுதி) இணை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அரசு தேர்வுகள் இயக்கக (இடைநிலை) இணை இயக்குநராகவும், பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குநர் (இடைநிலை) எஸ்.கோபிதாஸ் பள்ளி கல்வி இயக்கத்தின் (மேல்நிலை) இணை இயக்குநராகவும், பள்ளி கல்வி இயக்கம் இணை இயக்குநர் (மேல்நிலை) எம்.ராமசாமி தனியார் பள்ளிகள் இயக்கக, இணை இயக்குநராகவும், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் கே.சசிகலா பள்ளி கல்வி இயக்ககம் (இடைநிலை) இணை இயக்குநராகவும், அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (இடைநிலை) கே.செல்வகுமார் பள்ளி கல்வி (சமக்ர சிக்‌ஷா) ஒருங்கிணைந்த இணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் இணை இயக்குநர் நிலையில் கூடுதல் உறுப்பினர் எஸ்.சுகன்யா தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குநராகவும் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆணையர் பதவி ரத்து: பள்ளி கல்வித்துறை இயக்குநராக அறிவொளி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: