அதிமுக ஆட்சியில் தயாரிக்கப்பட்ட கைத்தறி போர்வைகள் தரமற்றவை: கூட்டுறவு சங்கங்களுக்கு திருப்பி அனுப்பிய கோஆப்டெக்ஸ்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அதிமுக ஆட்சியின் போது தயாரிக்கப்பட்ட கைத்தறி போர்வைகள் தரமற்றவை என கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது நெசவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜமுக்காலத்திற்கு புகழ் பெற்ற பவானி போல போர்வைகளுக்கு புகழ் பெற்றது சென்னிமலை. ஈரோடு அருகே அமைந்துள்ள இந்த மலை நகரத்தில் இயங்கி வரும் 40க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நூலை கொண்டு இவர்கள் நெய்யும் போர்வைகள் கோஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. இந்நிலையில் சென்னிமலை போர்வைகள் தரமற்று இருப்பதாக கூறி 5 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை உட்பட ரூ.5 கோடி மதிப்புள்ள போர்வைகளை கோஆப்டெக்ஸ் கூட்டுறவு சங்கங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

போர்வை கொள்முதலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள கைத்தறியாளர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். போர்வை தயாரிக்க நூல் கொடுப்பதே கோஆப்டெக்ஸ் தான் என்று தெரிவித்த அவர்கள் கொள்முதல் செய்யும் போது தரம் குறித்து ஒன்றும் சொல்லாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு போர்வைகளை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.

பருத்தி நூல்களுக்கு பதிலாக பனியன் கழிவு பஞ்சுகள் மற்றும் பாலிஸ்டர் கலந்த நூல்களால் போர்வை தயாரிக்கப் பட்டதாகவும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட போர்வைகளை கைத்தறி என்று கூறி சங்க நிர்வாகிகள் விற்பனைக்கு அனுப்பியதுமே இந்த சர்ச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் தயாரிக்கப்பட்ட கைத்தறி போர்வைகள் தரமற்றவை: கூட்டுறவு சங்கங்களுக்கு திருப்பி அனுப்பிய கோஆப்டெக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: