வழக்கறிஞர் மீதான தேச விரோத வழக்கில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் கடுமையாக கருதும்: ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் கடுமையான செயலாக கருதப்படும் என்று எச்சரித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த என்.ஐ.ஏ., மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் முகமது அப்பாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.ஐ.ஏ.வுக்கு எதிராக முகநூலில் சில கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காகவும் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். எனவே, அவர் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று முகமது அப்பாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு என்.ஐ.ஏ., தரப்பு வழக்கறிஞர், போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆதாரங்கள் குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்கிறேன் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்து விட்டு அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அரிவாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ., அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அதை இந்த நீதிமன்றம் தீவிரமாக கருதும். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. தரப்பு விளக்கத்தை கேட்காமல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து மனுவுக்கு பதிலளிக்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post வழக்கறிஞர் மீதான தேச விரோத வழக்கில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் கடுமையாக கருதும்: ஐகோர்ட் கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: