‘அதிமுக என்றால் எடப்பாடிதான்’ ஓபிஎஸ் நடத்தியது மாநாடு அல்ல சாதாரண பேச்சாளரின் கூட்டம்: ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கிண்டல்

மதுரை: ‘திருச்சியில் ஓபிஎஸ் நடத்தியது மாநாடு அல்ல. அங்கு கூடியது சாதாரண பேச்சாளரின் கூட்டம்’ என்று எடப்பாடி அணி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கிண்டலடித்து உள்ளார். மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் காதக்கிணறு கிராமத்தில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் நடந்தது மாநாடு அல்ல. அது பொதுக்கூட்டம். நாங்கள் நடத்துகிற மாதிரி சாதாரண பொதுக்கூட்டம். சாதாரண தலைமைக்கழக பேச்சாளர் பேசும் கூட்டம் மாதிரி. அவர்கள் எந்த முயற்சி எடுத்தும் பெரிய கூட்டத்தை கூட்ட முடியவில்லை. அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அநாகரிகமாக பேசி உள்ளார். அவர் விரக்தியின் உச்சியில் இருக்கிறார்.

இந்த கூட்டம் மூலம் புதிய கட்சி, சின்னத்தை ஆரம்பிப்பதில் அடித்தளம் அமைத்துள்ளார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் அதிமுகவை பேசுவதை தவிர்த்து விட வேண்டும். அரசியல் நாகரீகம் கருதி, நாகரீகமாக பேசுவதை விட்டு விட்டு, எடப்பாடியை ஒருமையில் பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டார். இனிமேல் அவர் வழக்கு தொடுப்பதில் பயன் இல்லை. அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமியைத்தான் தொண்டன் நினைப்பான். அலுவலகம், கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. தேர்தல் ஆணையமும் கூறிவிட்டது. ஓபிஎஸ் தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தினால், அவருக்குதான் அவமானம். அதிமுக என்ற பெயரை பயன்படுத்தினால் அவரே வெட்கப்பட வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும். எடப்பாடி கூறியது போல் ஓபிஎஸ் முடிந்த கதை. இடிந்து விட்ட கட்டிடம்.

இடிந்த செங்கலுக்குள் சிக்கி விட்ட இவர், மீண்டும் கட்டுவதற்கு முயற்சி செய்யலாம். எம்ஜிஆர் வேடத்தை இவருக்கும் (எடப்பாடி) போட்டு பார்ப்போம். இன்னொருத்தருக்கும் (ஓபிஎஸ்) போட்டு பார்ப்போம். இதில் எது எம்ஜிஆரை ஒட்டி வருகிறது. பொருந்தி வருகிறது என பார்ப்போம். தமிழ்நாட்டில், ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இரண்டு கட்சியில்தான் உள்கட்டமைப்பு உள்ளது. இந்த கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமையும். இதனை மறைக்க முடியாது. கூட்டணி அமைப்பதில், எங்களுக்கு உரிமை உண்டு. கூட்டணி அமைப்பது தேர்தல் காலக்கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி. யாரை வேண்டுமானாலும், சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

The post ‘அதிமுக என்றால் எடப்பாடிதான்’ ஓபிஎஸ் நடத்தியது மாநாடு அல்ல சாதாரண பேச்சாளரின் கூட்டம்: ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: