ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக பள்ளிகள், ஏகலைவா உண்டி உறைவிட கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ – மாணவியர்களுக்காக விடுதிகள், பள்ளிகள் மற்றும் ஏகலைவா உண்டி உறைவிடப்பள்ளி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.42.45 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிக் கட்டடங்கள், ரூ.16.59 கோடியில் கட்டப்பட்டுள்ள 9 பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.22.97 செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படும் தாட்கோ நிறுவனத்தின், மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.2.4 கோடியில் 23 வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதல்வர் அந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல, 2022-23ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, வீடு இல்லாதவர்களுக்கு 500 தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தலா ரூ.11 லட்சம் வீதம் மொத்தம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 7 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக பள்ளிகள், ஏகலைவா உண்டி உறைவிட கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: