ஆளவந்தாரின் ரூ.1000 கோடி சொத்துக்கு உரிமை கோரும் விழுப்புரம் நபர் மீது கிரிமினல் நடவடிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘‘ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 1000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல், சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் வடசிறுவள்ளூரை சேர்ந்த கே.எம்.சாமி (வயது 80) என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நெம்மேலி ஆளவந்தாரின் தம்பி வீராசாமி நாயக்கரின் மகனான முத்துகிருஷ்ண நாயக்கர் எனக்கு எழுதி கொடுத்த உயில் 1995ல் சென்னை தி.நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில், இந்த சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஒரு போலி அறக்கட்டளையை உருவாக்கி எனது கண்காணிப்பில் இருந்த சொத்துக்களை அந்த அறக்கட்டளை பெயருக்கு பதிவு செய்து பட்டா வாங்கியுள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக பதிவான இந்த பட்டாவை ரத்து செய்யுமாறு செங்கல்பட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, ஆர்டிஓ ஆகியோருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, போலி அறக்கட்டளை பெயரில் பதிவான பட்டாவை ரத்து செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முத்துகிருஷ்ண நாயக்கரின் இறப்பு சான்றிதழ் போலியானது என்று தெரிவித்த நீதிபதி இது குறித்து விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 1914ம் ஆண்டு ஆளவந்தார் நாயக்கர், ‘தனது அறக்கட்டளையின் சொத்துக்களை திருவிடந்தை ஆதிவராக பெருமாள் கோயில், மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில், திருப்தி வெங்கடேச பெருமாள் ஆகிய கோயில்களுக்கு’ உயில் எழுதி வைத்துள்ளார். இந்த அறக்கட்டளையை நிர்வாகம் செய்ய மேலாளராக அவரது தம்பி மகன் முத்துகிருஷ்ண நாயக்கரை மாத சம்பளம் அடிப்படையில் நியமித்தார். இந்த நிலையில், ஆளவந்தார் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற முத்துகிருஷ்ண நாயக்கர் முயன்றபோது அதை எதிர்த்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறக்கட்டளையை நிர்வகிக்க முத்துகிருஷ்ண நாயக்கருடன் கூடுதலாக 2 அறங்காவலர்களை நியமித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் 1916ல் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆளவந்தார் அறக்கட்டளையை பொது அறக்கட்டளையாக அறிவித்தது. இந்த நிலையில், 1936 செப்டம்பர் 3ம் தேதி முத்துகிருஷ்ண நாயக்கர் மரணம் அடையவே அவரது சொத்துக்கள் தொடர்பாக அவரது மகன்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 1943ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறக்கட்டளையை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் முத்துகிருஷ்ண நாயக்கர் 1997ல்தான் மரணமடைந்தார். அவரது உறவினரான தான்தான் அறக்கட்டளையை நிர்வகிக்க முடியும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முத்துகிருஷ்ண நாயக்கரின் இறப்பு சான்றிதழ் போலியானது. உயர் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அறக்கட்டளை மீது எந்த உரிமையும் இல்லாத நிலையில் ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் மனுதாரர் போலி உயில் தயாரித்து, போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார். கோயில் திருப்பணிகளுக்காக வழங்கப்பட்ட அறக்கட்டளையை சட்டவிரோதமாக அபகரிக்க நினைத்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அதிக அபராதம் விதிக்கலாம். ஆனால், அவரின் வயது கருதி இந்த நீதிமன்றம் அபராதம் விதிக்கவில்லை. அதே நேரத்தில், மனுதாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த நடவடிக்கையை அரசு 4 வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஆளவந்தாரின் ரூ.1000 கோடி சொத்துக்கு உரிமை கோரும் விழுப்புரம் நபர் மீது கிரிமினல் நடவடிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: