உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு பூட்டிய வீட்டில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது: ரூ.5,000, செல்போன் பறிமுதல்

பூந்தமல்லி: உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு, பூட்டிய வீட்டில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம்(30), ஆட்டோ டிரைவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த ரூ.5,000 மாயமாகி இருந்தது. இதற்கு முன்பு அடுத்தடுத்து 3 முறை இவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.20,000 வரை பணம் திருட்டு போனது. ஆனால், வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்காமல் அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும் நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லசிவமும் அவரது மனைவியும் கொள்ளையனை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டிற்குள் மறைந்து கொண்டார். அவரது மனைவி மட்டும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக கதவை திறந்து உள்ளே வந்தார். அப்போது வீட்டிற்குள் மறைந்து இருந்த நல்லசிவம் திருடனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும் வந்து தொடர்ந்து கைவரிசை காட்டிய வந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், சிக்கிய திருடனை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் திருட்டில் ஈடுபட்ட நபர் பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரித்தார். நல்லசிவம் வீட்டின் பூட்டு, பிடித்து இழுத்தால் திறந்து கொள்ளும்படி இருந்தது இருந்ததால் மணிகண்டனுக்கு வசதியாக போனது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் சென்றவுடன் லாவகமாக கதவை திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார். முதலில் வீட்டில் பணம் மாயமானதால் நல்லசிவமும் அவரது மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்தனர். பின்னர் தொடர்ந்து பணம் மாயமானதால், வெளியில் இருந்து வரும் மர்ம நபர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, கணவன்-மனைவி சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையனை மடக்கி பிடித்து உள்ளனர். கைதான மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டியதாக தெரிவித்து உள்ளார். திருடிய பணத்தில் புதிதாக செல்போன் வாங்கியதும், உல்லாசமாக செலவு செய்ததும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மணிகண்டனிடம் இருந்த ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு பூட்டிய வீட்டில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது: ரூ.5,000, செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: