மேல்சீசமங்கலம் ஊராட்சியில் தரமற்ற பணிகள் 45.54 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை 2 வாரத்தில் பெயர்ந்தது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி, டிச.1: ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சியில் ₹45.54 லட்சத்தில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்சாலையால் 2 வாரத்திலேயே குண்டும் குழியுமாக ஆனதால், கமிஷன் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்யாறு ஒன்றியம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காரமேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேல்சீசமங்கலம் பொன்னியம்மன் கோயில் வழியாக காரமேடு கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரம் வரை செல்லும் தார்சாலை வழியாக கல்பூண்டி, லாடப்பாடி, மொழுகம்பூண்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஆரணி, வாழப்பந்தல், பெரணமல்லுர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையெடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் 2019-2020 ஆண்டு ₹45.54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 கி.மீ வரை புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைப்பட்ட தார்சாலையானது, 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில் அச்சாலை வழியாக சென்ற பஸ், லாரிகளால் மீண்டும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், நேற்று முன்தினம் அவ்வழியாக சென்ற மினி லாரி பள்ளத்தில் சிக்கி பழுதடைந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் முறையிட்டனர். பின்னர், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு தகவல் தெரிவித்து சாலையை சீரமைக்க கூறியுள்ளார்.ஆனால், அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் இதுநாள் வரை சாலையை சீரமைக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமற்ற சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: