குறைதீர் முகாம்களில் 260 மனுக்கள் பெறப்பட்டன

ஊட்டி,நவ.30: நீலகிரி மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் குறைதீர் முகாம் நடந்தது. மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூர்மியாபுரம், மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொக்காபுரம், கொலக்கொம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சடையன்கொம்பை, மேல்குரங்குமேடு, கீழ்குரங்குமேடு ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்டது. மேலும் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலரை, செடிக்கல், பாம்பரை, நியூஹோப் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலவாடி, குறிஞ்சிநகர், காமராஜ் நகர், அம்பலமூலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரிக்கேபட்ரா, குதிரவட்டம், ஈரானி, பிடாரி ஆகிய பழங்குடியின கிராமங்களில் நடத்தப்பட்டது. இதில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இம்முகாம்களில் 443 பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து 260 மனுக்கள் பெறப்பட்டன.

Related Stories: