அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை, நவ.25: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, வழக்கமாக நடைெபறும் சுவாமி மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக, திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா தினமும் நடந்து வருகிறது. அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாளான நேற்று சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், காலை 11 மணியளவில் விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, 5ம் பிரகாரத்தில் பவனி வந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 8 மணியளவில் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி நடந்தது. அப்போது, விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி தனித்தனி வாகனங்களில் பவனி வந்தனர். ஆனாலும், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை.

ஆண்டுதோறும் 5ம் நாள் உற்சவத்தின்போது, பெரிய ரிஷப வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வருவது வழக்கம். தற்போது, மாடவீதி வலம் தடையானதால், 5ம் பிரகாரத்தில் இடநெருக்கடியால் பெரிய ரிஷப வாகனத்தை பயன்படுத்த முடியாததால், சிறிய வாகனங்களில் சுவாமி பவனி வந்தார். இந்நிலையில் கொரோனா தடுக்கும் வகையில், சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இ- டிக்கெட் இல்லாத பக்தர்களும் அனுமதிக்கப்பட்டதால், தரிசன வரிசையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, கோயிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவை கோயில் வெளி பிரகாரத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: