இந்த நாள் தேசிய தரச்சான்று பெற்ற அரசு மருத்துவமனையின் அவலம் அடிக்கடி பழுதாகும் சி.டி ஸ்கேன்

அருப்புக்கோட்டை, நவ. 23: அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 27 டாக்டர்கள், 6 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 53 செவிலியர்கள், 36 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், கொரோனா சிறப்பு பணிக்காக 34 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பொதுப்பிரிவு, டயலாசிஸ், தீவிர சிகிச்சைபிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பணிகளும் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.

மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மற்றும் சீரிய நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததால்  என்ஏபிஹெச், காயகல்ப், தேசியதரச்சான்று உட்பட பலவிருதுகளை மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த வருடம் தரச்சான்று பெற்று அரசு மூலம் ஒரு படுக்கைக்கு 10ஆயிரம் வீதம் 294 படுக்கைகளுக்கும், 3 வருடங்களுக்கான  தொகையை பெற்றுள்ளது. மேலும் திருச்சுழி, நரிக்குடி, ரெட்டியபட்டி, பந்தல்குடி, காரியாபட்டி உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த மருத்துமனை தான் மையமாக உள்ளது. அத்துடன் அருகே உள்ள மாவட்ட எல்லையைச் சேர்ந்த மக்களும் இங்குதான் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு கடந்த 2008ல் புதிய சி.டிஸ்கேன் வசதி செய்யப்பட்டது.

இது அடிக்கடி பழுது ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கி வந்த சி.டி ஸ்கேன் கருவியை இங்கு வந்து பொருத்தினர். இந்த சி.டி ஸ்கேன் கருவி 2008ம் ஆண்டு வாங்கியது. இந்த கருவியில் முழு உடல் பரிசோதனை முக்கிய பாகங்கள் ஸ்கேன் செய்ய வசதிகள் உள்ளன. தினமும் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்கேன் எடுக்க வருகின்றனர். குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சி.டி ஸ்கேன் எடுக்கும் போது அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மிஷின் பழையதாக இருப்பதால் குறைந்த எண்ணிக்கையில் தான் நோயாளிகளுக்கு  ஸ்கேன் எடுக்க முடிகிறது.

அவசர காலத்தில் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க முடியவில்லை. இதனால் இருதய சம்பந்தமான நோயாளிகளுக்கும்,. அவசர சிகிச்சைக்கு உடனடியாக ஸ்கேன் செய்து  முடிவு தெரியாத நிலையில் உள்ளது. இதனால் அவசரத்திற்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனைைக்கு சென்று  ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நோயாளிகளின்  நலன்கருதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய சி.டி ஸ்கேன் கருவியை பொருத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: