வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் நிர்வாகிகள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்

ஊட்டி, நவ. 21:நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட தி.மு.க. வினருக்கு அழைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து பெற்று அதனை அன்றைய தினமே அனைத்து நகர, ஒன்றிய செயலாளர்களுக்கும் நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்ட நகர, ஒன்றிய செயலாளர்கள் உடனடியாக வாக்குச்சாவடி பாகம் வாரியாக அந்தந்த வார்டு, கிளை செயலாளர் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் ஒப்படைத்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் எவ்வித சுணக்கமுமின்றி முனைப்புடன் ஈடுபட வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. வினர் அனைவரும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தனி கவனத்துடன் ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவை மேற்கொள்ள வசதியாக நவம்பர் 21, 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 683 வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவரும் தவறாது காலை 10 மணி முதல் மலை 5 மணி வரை அவசியம் கலந்துகொண்டு 01.01.2021 தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை படிவம் 6ல் பூர்த்தி செய்து உரிய ஆதாரங்களை இணைத்து தர வேண்டும்.   வரைவு வாக்காளர் பட்டியலில் பிழை, திருத்தம், முகவரி மாற்றம் ஏதாவது இருந்தால் படிவம் 8, படிவம் 8 ஏ படிவங்களை பயன்படுத்த வேண்டும்.

இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளர் பெயர் நீக்காமல் இருப்பின் படிவம் 7 பூர்த்தி செய்து தங்களது வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் வழங்கி அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றிட வேண்டும். ஒவ்வொரு சிறப்பு முகாம் முடிவுற்றவுடன் அந்த நாளில் கிடைக்கபெற்ற மொத்த படிவங்களின் எண்ணிக்கைகளை பெற்று தொடர்புடைய நகர, ஒன்றிய செயலாளர்களிடம் அன்றே தெரிவிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் அல்லாத மற்ற அனைத்து அரசு வேலை நாட்களிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சேகரித்துள்ள படிவம் 6, படிவம் 7, படிவம் 8, படிவம் 8 ஏ ஆகிய படிவங்களுடன் உரிய சான்றிதழ் ஆதாரங்களை இணைத்து அந்தந்த ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் வழங்கி ஒப்புகை சீட்டை பெற்றிட வேண்டும். சிறப்பு முகாம்களில் தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் முனைப்புடன் செயலாற்றிட வேண்டும். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Related Stories: