ஊட்டி, நவ. 21: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் 313 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.