திருவண்ணாமலை தீபத்திருவிழா முதல் நாள் உற்சவம்: அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி

திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முதல் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கோயில் 5ம் பிரகாரத்தில் காலை உற்சவம் நடந்தது. கொடியேற்றத்தின் போது எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.அதைத்தொடர்ந்து, நேற்று இரவு உற்சவமும் கோயில் 5ம் பிரகாரத்தில் நடந்தது. அப்போது, விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தியம்மன், வெள்ளி விமானங்களில் எழுந்தருளி பவனி வந்தனர்.கார்த்திகை தீபத்திருவிழாவில், வழக்கமாக சுவாமி வீதியுலா மாடவீதியில் விமரிசையாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மாடவீதியில் வீதியுலா ரத்து செய்யப்பட்டதால், 5ம் பிரகாரத்தில் நடந்தது.

மேலும், கோயிலுக்குள் நடந்த சுவாமி உலாவையும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, கோயில் ஊழியர்கள், திருப்பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மட்டுமே 5ம் பிரகாரத்தில் நடந்த சுவாமி உலாவில் கலந்து கொண்டனர்.பொது தரிசன வரிசையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள், சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பஞ்சமூர்த்திகள் பவனியை தரிசிக்க அனுமதிக்கவில்லை.விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை விநாயகர், சந்திரசேகரர் பவனியும், இரவு பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும்.

Related Stories: