மாநகராட்சி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, நவ.6: ஈரோடு மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் தினக்கூலி மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு மற்றும் திறன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கப்படும் ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையாகும்.

அதன்படி, நடப்பாண்டில் ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தரமற்ற தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.676 வீதமும், ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.714 வீதமும், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.753ம் வழங்க வேண்டும். ஆனால், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குவதற்கு பதிலாக பழைய ஊதியம் தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநகராட்சியில் பணியாற்றி வரும் அனைத்து தினக்கூலி, பகுதிநேர பணியாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த புதிய ஊதியத்தை முன் தேதியிட்டு கணக்கிட்டு ஊதிய நிலுவை தொகைகளை தீபாவளி பண்டிகைக்கு முன்பு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: