திருப்பூர் குமரன் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர், நவ.3: குமரன் ரோட்டில், விதிமுறை மீறி நிறுத்தப்படும் இரு மற்றும் 4 சக்கர வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் நகரின் முக்கிய பிரதான ரோடாக குமரன் ரோடு உள்ளது. இந்த ரோட்டில்தான் முக்கிய அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் ஏராளமாக உள்ளது. எனவே, இந்த ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரோட்டில் இரு மருங்கிலும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை அணிவகுத்து நிற்கும்.

இதனால், இந்த ரோட்டில் எப்போதும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள நீதிமன்ற சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வரை ஒரு புறத்தில் மட்டுமே, வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

தற்போது, இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு குமரன் ரோட்டின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இந்த விதிமுறை மீறலால் கடுமையான போக்குரத்து நெரிசல் ஏற்ட்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, இப்பகுதியில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: