நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் திருவண்ணாமலையில் பரபரப்பு 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாத

திருவண்ணாமலை, அக்.28: திருவண்ணாமலையில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாத்தூர், வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரி ெதரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் குடிநீர் பைப்லைன், மேம்பாலம் அமைக்கும் பணியால் உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியிடம் முறையிட்டனர். ஆனாலும், நகராட்சி நிர்வாகம் பைப்லைனை சீரமைக்கவில்லை. மேம்பாலம் அமைக்கும் பணி முடியும் வரை, பைப்லைன் சீரமைக்க முடியாது என கைவிட்டனர். அதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதி மக்கள், அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதையும் நகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நேரில் முறையிட சென்றனர்.

ஆனால், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்துக்கு சென்றுவிட்டதால், பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட யாரும் முன்வரவில்லை. நீண்ட நேரம் அங்கு காத்திருந்து விரக்தியடைந்த பெண்கள், திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சமரச முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும், நகராட்சி அதிகாரிகள் வரும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் மற்றும் அலுவலர்கள் நேரில் வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினர். 2 நாட்களில் பைப்லைனை சீரமைத்து, குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் வாக்குறுதியை காக்க தவறினால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Related Stories: