தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர் சேர்மன் சின்னத்துரை தகவல்

தூத்துக்குடி, அக். 23:  தேசிய கால்நடை குழும திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் 15பேருக்கு 75சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்த ஆவின் சேர்மன் சின்னத்துரை, பயனாளிகள் 15 பேருக்கு புல்வெட்டும் கருவிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பொதுப்பிரிவை சேர்ந்த 10 பேருக்கும், பட்டியலின வகுப்பை சேர்ந்த 5 பேருக்கும் என மொத்தம் 15 பேருக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய கால்நடை குழும திட்டத்தின் கீழ் இதுவரை 2 ஆயிரம் கால்நடைகளுக்கு 50 மற்றும் 75 சதவீத மானியத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4கால்நடை மருத்துவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்நடை தீவன வங்கி திட்டத்தின் கீழ் கால்நடை தீவனம் வளர்க்க மானியத்துடன் கூடிய திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நம் மாவட்டத்தில் ரூ.71.05 லட்சத்தில் 13 இடங்களில் ஹைடெக் பார்லர்கள் அமைப்பதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டவுடன் ஹைடெக் பார்லர்கள் திறக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகம், சிவன்கோயில் முன்பு, கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களிலும் கோவில்பட்டி, திருச்செந்தூர் என மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது’’ என்றார். விழாவில்  துணைப் பதிவாளர் (பால்வளம்) கணேசன், ஆவின் பொதுமேலாளர் ராமசாமி, மேலாளர்கள் அனுஷாசிங் (விற்பனை), சாந்தகுமார் (திட்டம்), சுப்பிரமணியன் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: