நவராத்திரி விழா நாளை தொடக்கம் பக்தர்களுக்கு அனுமதியில்லை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்பு மிக்கது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்படி நாளை இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

நாளை மறுதினம் (18ம் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 19ம் தேதி கெஜலட்சுமி அலங்காரத்திலும், 20ம் தேதி மனோன்மணி அலங்காரத்திலும், 21ம் தேதி ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

22ம் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், 23ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 24ம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 25ம் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்கிறார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.

விழாவின் நிறைவாக, விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனாலும், அண்ணாமலையார் கோயிலில் வழக்கம்போல சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நவராத்திரி விழா நடைபெறும் அலங்கார மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாது என கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: