பால் உணவு பொருட்களை 4 நாளுக்குள் பயன்படுத்த வேண்டும்

கோவை, அக். 1: பால் உணவு பொருட்கள் ஒன்று முதல் 4 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், காலவதி தேதியை குறிப்பிட வேண்டும் எனவும் வணிகர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலுடன் சேர்த்து கோயா, சேனா, சர்க்கரை மற்றும் பிற பொருட்களில் இருந்து இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது. இவை குறைந்த ஆயுளை கொண்டது. எனவே, பால் உணவு பொருட்களை ஒன்று முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அது நஞ்சாகிவிடும். மேலும், இனிப்பு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் போதிய சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவு பொருட்கள் பேக்கிங் மீது காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருளில் எண்ணெய், நெய் பயன்படுத்தப்பட்டதா? என குறிப்பிட வேண்டும்.

பால் சார்ந்த பொருட்கள் பற்றிய பதிவு பராமரிக்கப்பட வேண்டும். பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதிக வண்ணம் சேர்க்கக்கூடாது. உணவு பொருட்களை அதன் கால அளவிற்கு ஏற்றாற்போல் வைக்க வேண்டும். குறிப்பாக, பாதம் பால், ராசகுல்லா, ராசமலாய் ரப்ரி, ராஜ் பாக் போற்றவற்றை 2 நாட்கள்தான் பயன்படுத்த வேண்டும். பால் கேக், மதுரா பீடா, பிளைன் பார்பி, பால் பார்பி, பிஸ்தா பார்பி போன்றவற்றை 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மேலும், உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: